Skip to main content

கடலூர் பள்ளியின் 150-ஆவது ஆண்டு நிகழ்வில் 5152 மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

கடலூர் மஞ்சக்குப்பம் கர்னல் தோட்டத்தில் 1868 ஆம் ஆண்டு ஏழை மாணவர்கள் தங்கி படிப்பதற்காக விடுதியுடன் கூடிய புனித வளனார் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. 150  ஆண்டு காலம் நிறைவடைவதை முன்னிட்டு  கடந்த காலங்களில் பல்வேறு ஆண்டுகளில் விடுதியில் தங்கி பயின்ற விடுதி மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி பள்ளியின் விளையிட்டு திடலில் நடைபெற்றது.

 

உலக சாதனை நிகழ்ச்சியாக நடந்த நிகழ்வினை சாதனையாக மதிப்பீடு செய்வதற்காக அசிஸ்ட் உலக சாதனை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன், தென் மண்டல பொறுப்பாளர் அருமைநாதன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். 5152 முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல், 759 விடுதி மாணவர்களுடன் விடுதியின் முன்னாள் மாணவர்கள் 800 பேர் ஒரே நேரத்தில் கை குலுக்குதல், 3000 முன்னாள் மாணவர்கள் ஒரே நேரத்தில் செல்போன் டார்ச் வெளிச்சம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல், 5152 மாணவர்களும் ஒரே நேரத்தில் கை குலுக்குதல் என 5 வகையான உலக சாதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அசிஸ்ட் நிறுவனம் சாதனைகளை அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டியது. இதற்கு முன்பாக கேரளாவில் ஒரு பள்ளி விழாவில் 4238 மாணவர்கள் ஒன்று கூடிய நிகழ்வை இச்சாதனை முறியடித்துள்ளது. 

 

 

 

நிகழ்ச்சியில் அருட்தந்தைகள் ரட்சகர், அருள்தாஸ், பள்ளி முதல்வர் அருள்ராஜ், கல்லூரி முதல்வர் பீட்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 


வருகிற 4ஆம் தேதி நடைபெறும் பள்ளியின் 150-ஆவது ஆண்டு பெருவிழாவில் மறை மாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்