கரோனா நோய்த் தொற்று தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மோசமான நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு தற்போது ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் (10.05.2021) ஊரடங்கு நடைமுறைக்கு வரும் நிலையில், 08.05.2021 வரை திருச்சி மாவட்டத்தில் 820 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவா்களில் 633 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனா். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களைப் புதைப்பதால் மீண்டும் நோய்க் கிருமியின் தாக்கம் அதிகம் ஆகும் என்று கருதுவதால், இறந்தவா்களின் உடலை எரியூட்டி வருகின்றனா்.
அதன்படி திருச்சியில் ஒரேநாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனா். ஓயாமாரி மின் மயானத்தில் இந்த உடல்கள் எரியூட்டப்பட்டு வரும் நிலையில், இரவு முதல் 13 உடல்கள் எரியூட்ட காத்துக்கிடக்கின்றன. ஒரே ஒரு இடத்தில் மின் மயானம் இருப்பதால், உடல்களைக் காத்திருந்து எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால், மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கருமண்டபம் பகுதியில் இயங்கி வந்த மின் மயானம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சில சட்டவிரோதமான செயல்களால் மூடப்பட்டுள்ளது.
அதை மீண்டும் திறந்தால் பிணங்களை எரியூட்ட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும், அதைப் பாதுகாப்புடன் திறந்து புனரமைத்து அரசு கட்டுபாட்டில் வைத்தால் இந்தக் கரோனா நோய்த் தொற்று காலத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனா். இதற்கு அரசும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனா்.