Skip to main content

ஓசூர் மாநகராட்சி கமிஷனர் உள்பட 10 பேர் இடமாற்றம்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

10 transferred, including Hosur Corporation Commissioner!

 

உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஓசூர் மாநகராட்சி ஆணையர் உட்பட 10 ஆணையர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் ஆணையர்கள், முந்தைய ஆட்சியில் செல்வாக்குடன் இருந்த உயர் அலுவலர்கள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். தற்போது பரவலாக மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். முதற்கட்டமாக 10 மாநகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, உள்ளாட்சித்துறை இணை இயக்குநராக பணியாற்றிவரும் பாலசுப்ரமணியன், ஓசூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் ஆர்.டி.எம்.ஏ. ரவிச்சந்திரன், கரூர் மாநகராட்சி ஆணையராகவும்; தேசிய நகர்ப்புற பெண்கள் மேம்பாட்டு இணை இயக்குநராக உள்ள கண்ணன், கோவை நகர்ப்புற பணியாளர்கள் பயிற்சி மைய இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

செங்கல்பட்டு ஆர்.டி.எம்.ஏ. சரவணன், மதுரை ஆர்.டி.எம்.ஏ. ஆகவும்; கோவை நகர்ப்புற பணியாளர்கள் பயிற்சி மைய இயக்குநராக உள்ள நாராயணன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நகராட்சி ஆணையராக பணியாற்றிவந்த 5 பேர் மாநகராட்சி ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

 

கோவை நகர்ப்புற பணியாளர்கள் பயிற்சி மைய துணை இயக்குநராக உள்ள விஸ்வநாதன் கடலூர் மாநகராட்சி ஆணையராகவும், உதகமண்டலம் நகராட்சி ஆணையராக பணியாற்றிவரும் சரஸ்வதி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

கும்பகோணம் நகராட்சி ஆணையராக உள்ள நவேந்திரன், தேசிய பெண்கள் மேம்பாட்டு மைய இணை இயக்குநராகவும்; கடலூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவரும் மகேஸ்வரி, உள்ளாட்சித்துறை இணை இயக்குநராகவும்; கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

இதற்கான உத்தரவை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்