இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை கொடுத்திருந்தது. இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆகியோர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் “கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக எம்.பி கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் நடைபெற்றது. இது குறித்து அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்துள்ளார். அதில், தேர்தலுக்கான கழகப் பணிகளை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆகியோருடன் நானும் இடம்பெற்றுள்ளேன்.
இக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் இன்று தொடங்கினோம். குழுவின் சார்பில் தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரையறுப்பது குறித்து பல்வேறு கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். நாடும் நமதே, நாற்பதும் நமதே. இந்தியா கூட்டணி வெல்லும் வகையில் அயராது உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.