திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்றது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திமுக இளைஞரணியின் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாநாடு வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. சேலம் மாநாட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது. திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழகத்தின் வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர். 10 ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட இளைஞர் படை தயாராகவுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இந்தியா கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் கைகாட்டும் நபர் பிரதமராக வர நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.
நீட் தேர்வு உயிர்க்கொல்லி நோயாக மாறியுள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுமார் 85 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி பயமுறுத்த நினைக்கின்றனர். மத்திய அரசை கேள்வி கேட்டால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகின்றனர். நாங்கள் இ.டி. க்கும் பயப்படமாட்டோம், மோடிக்கும் பயப்படமாட்டோம். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். உங்கள் மிரட்டலுக்கெல்லாம், திமுக தொண்டனின் கைக்குழந்தை கூட பயப்படாது.
மாநில அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி தருவதற்கு நாங்கள் என்ன ஏடிஎம் எந்திரமா என்று கேட்டார்கள். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதையை நான் கொடுத்துவிட்டேன். ஆனால், நாங்கள் கேட்ட நிதியை அவர்கள் இன்னும் தரவில்லை. தமிழ் மொழி உரிமை அல்ல, எங்களது உயிர். தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள். இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் சரி. தமிழ்நாட்டில் பாஜகவால் கால் பதிக்க முடியாது. தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைத்தால், நீங்கள்தான் அழிந்துபோவீர்கள்” எனப் பேசினார்.