விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை பெற்று தந்த விஜயகாந்துக்கு பாராட்டு விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், பாலம் கட்டுவதற்கு உதவியாக இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், என்னை பற்றி இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தவறாக பேசி வருகிறார்கள். அவர்கள் பேசட்டும். தேர்தல் சமயத்தில் நாங்கள் யார் என்று தெரியும். மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 55 ஆண்டு கால கோரிக்கை. இதை நிறைவேற்ற நான், எனது மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, மோடியை சந்தித்து நிதி பெற்றதன் அடிப்படையில் இங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருப்பதற்கு தகுதியே கிடையாது. இந்த விஜயகாந்தை விமர்சிக்க அருகதை இல்லை. வெல்லம் உடைவதைபோல், பழனிசாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும். இவ்வாறு பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் 55 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், மத்திய அரசிடம் வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து ரூ.21 கோடியே 89 லட்சத்தை சிறப்பு நிதியாக பெற்று தந்ததன் மூலம் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.