Skip to main content

"கன்னத்திலே தடவாதே... மத்திய அரசே..." - வேல்முருகன்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

இன்று 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சி' வேல்முருகன், ஆளுநரை திரும்பப் பெறக் கோரி  சென்னையில் நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பேசியவர்,   
 

velmurugan



"இவ்வளவு செய்திகள் வந்த பின்பும் இந்த உயர்நீதிமன்றங்கள் மௌனமாக இருக்கின்றன. நீங்களே வந்து சுயோ மோட்டோ (suo moto) ஆக இதற்கு விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த நான்கு பெண்கள், அந்த பெண்களின் பெற்றோர்கள் தற்போது இந்த அவலத்தினால் பல பதற்றங்களில் மன உளைச்சலில் இருப்பார்கள்.  பேராசிரியர் நிர்மலாதேவியின் மூலமாக அந்த பெண்களுக்கு படிப்பு, பணம் போன்ற பலவற்றை ஆசை காட்டியிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் இருக்கும் சூச்சுமத்தைக்  கண்டுபிடிக்க வேண்டும். அவர் சென்ற பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம். அதன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பவர் மீதே கிரிமினல் வழக்கு இருக்கிறது. ஆனால், அவரை சட்டத்துக்கு புறம்பாக நியமித்திருக்கிறீர்கள். 

துணைவேந்தர்கள் எதற்காக வடக்கிலிருந்து வருகிறீர்கள்? சட்ட பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லையா? எவ்வளவு பெரிய நீதியரசர்கள், வழக்கறிஞர்களைக் கொண்டுள்ள தமிழ் சமூகத்தில் ஒருவருக்கும் துணை வேந்தர் தகுதி, பதவி கிடையாதா? அண்ணா பெயரில் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கே நீங்கள் துணை வேந்தரை மத்திய பிரேதசத்தில் இருந்து நியமிக்கிறீர்கள். ஏன் இசைக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த எங்கள் கருப்பு இனத்தின் புஷ்பவன குப்புசாமிக்கு இசைப் பல்கலைக்கழகத்தில் பதவி கிடையாது, அதற்கு கேரளத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுப்பீர்கள்? ஏன் என்றால் நாங்கள் எல்லாம் கருப்பு தோல், அவர்கள் சிவப்பு தோல் என்று. சிவப்பு தோலை பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் ஒரு மாதிரியாகத்தான் இந்த வடநாட்டுக்கும்பலுக்கு இருக்கிறது. வடநாட்டு கும்பலே நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்.
 

velmurugan protest



மத்திய அரசே, எங்கள் நீதியரசர் தலைமையில் நடக்கும் விசாரணைக்கு சிபிஐ துணையாக இருக்க வேண்டுமே தவிர, அது ஒருமையாக இருந்துவிட கூடாது. சிபிஐ ஆளுநரை காப்பாற்றுவதற்கோ, ஊழலை மறைப்பதற்கோ இருக்க கூடாது. இதுவரை இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் அனைவருக்கும் பதவியை ரத்து செய்ய வேண்டும். நேர்மையான நீதியரசர்களை, நடைமுறையில் இருக்கும் வழக்கறிஞர்களை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்ட வேண்டும். இந்த வழக்கில் பின்னால் இருப்பவர்கள் யார், இந்த ஆள் பிடிப்பவர்கள் வேலை செய்பவர் யார், அனைத்தையும் இந்த வெளியுலகத்திற்கு கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது அனைத்தும் நடக்க வேண்டும் என்றால் இங்கு புரோகிதர் ஆளுநராக இருக்க கூடாது. நரேந்திர மோடியே நீ நியாயமானவராக இருந்தால், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், எங்கள் பெண்களுக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உடனடியாக இந்த புரோகிதரை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழர் வாழ்வுரிமை கட்சி பேரணியை தொடர்கிறது", என்று முடித்துவிட்டு "மத்திய அரசே... மத்திய அரசே... பெண் பத்திரிகையாளர்களை தொடாதே... தடவாதே.. தடவாதே... கன்னத்தில் தடவாதே" என்று கோஷமிட்டனர்.      

 

சார்ந்த செய்திகள்