Skip to main content

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க.!  

Published on 10/03/2021 | Edited on 11/03/2021

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

 

அதன்படி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே வெளியான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

 

தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் சத்திய நாராயணன், மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் நட்ராஜ், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் சைதை துரைசாமி, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன், ஜோலார்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் கே.சி.வீரமணி, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் கே.பி.முனுசாமி எம்.பி., பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் சரோஜா, குமாரப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தங்கமணி, பவானி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கருப்பணன், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பென்ஜமின், அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் கோகுல இந்திரா, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வளர்மதி, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் அசோக், போளூர் சட்டமன்றத் தொகுதியில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் சபாநாயகர் தனபால், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 171 பேர் இடம் பெற்றுள்ளனர். 

 

அதேபோல், தற்போதைய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- பிரபு, ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி- மனோரஞ்சிதம், பர்கூர் சட்டமன்றத் தொகுதி- ராஜேந்திரன், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி- மருதமுத்து, ஓமலூர் சட்டமன்றத் தொகுதி- வெற்றிவேல், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி- எஸ்.ராஜா, சாத்தூர் சட்டமன்றத் தொகுதி- ராஜவர்மன், திருத்தணி சட்டமன்றத் தொகுதி- நரசிம்மன் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. மேலும், தற்போதைய அமைச்சர்கள் நிலோபர் கபில், வளர்மதி, பாஸ்கர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், அ.தி.மு.க. 177 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளை த.மா.கா., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அ.தி.மு.க. பகிர்ந்தளிக்கும் எனக் கூறப்படுகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்