தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. அதேசமயம், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தி.மு.க.வின் வேட்பாளர்கள் நேர்காணலில் முதல்வர் பழனிசாமி போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் 'எடப்பாடி' சட்டமன்றத் தொகுதி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் 'போடி' சட்டமன்றத் தொகுதிக்கு, தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முன்னிலையில், இன்று (04/03/2021) காலை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது. முதற்கட்டமாக பிற்பகல் 03.00 மணி வரை 139 தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று (04/03/2021) ஒரேநாளில் அனைத்துத் தொகுதிகளுக்குமான நேர்காணலை முடிக்கத் திட்டமிட்டிருக்கும் அ.தி.மு.க. தலைமை, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த பிறகு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்காணல் காரணமாக, அ.தி.மு.க. அலுவலகத்தில் அக்கட்சித் தொண்டர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.