திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவும் களப்பணிக்கு அழைப்பும் விடுத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்..
பாரம்பரியம் மிக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆணையத்தால் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது. அதை மீட்பதற்கு நானும் பல முயற்சிகளை செய்தேன். இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நானே ஆஜராகி வாதாடினேன். எதுவும் செய்ய முடியவில்லை.
மீண்டும் மறு தொகுதி சீரமைப்பு வரும்போது புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே தொகுதியை மீட்க புதுக்கோட்டை மாவட்டத்தில் நோட்டாவிற்கு வாக்களிப்பவர்கள் இதனை சிந்திக்கவேண்டும், நோட்டாவிற்கு வாக்களித்தால் எந்த பயனும் இல்லை. மேலும் ஒன்று அல்லது சதவீதம் வாக்காளர்கள் வேண்டுமானால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம். அது என்னுடைய வெற்றியை பாதிக்காது.
சட்டசபையில் விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே நடந்த மோதலுக்கு திமுக தான் காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் தற்போது கூறிவருவது விஜயகாந்தை இழிவுபடுத்தும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. அவர்கள் கூறுவதை பார்த்தால் கடந்த ஆண்டு வீசிய புயலுக்கும் திமுகதான் காரணம் என்று சொல்வார்கள் போல. இதுபோன்ற விமர்சனங்களை பிரேமலதா விஜயகாந்த் வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்.
அகில இந்திய தலைவராக உள்ள சுதர்சன நாச்சியப்பன் கட்சித் தலைமை எடுத்துள்ள முடிவை ஏற்று கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தல் பணியாற்ற வேண்டும். இனி இதுபோன்ற கட்சிக்கு எதிராக பேசும் முடிவை அவர் கைவிட வேண்டும். இதுகுறித்து நானும் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். இனி வரும் காலங்களில் அவர் பொதுவெளியில் இதுபோன்று பேசமாட்டார் என்று நம்புகிறேன்.
சுயேட்சை வேட்பாளர்கள் கூட எனக்கு போட்டி வேட்பாளர்கள்தான். அதனால் பொதுமக்களிடம் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வெற்றி பெறுவேன்.
7 பேர் விடுதலை என்பது சட்ட ரீதியாக நடக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி மட்டுமல்ல அவரோடு பல பேர் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டும் 7 பேர் விடுதலை குறித்து சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
தமிழகத்தில் பெரியாரை தெரிந்த அனைவருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனையும் தெரியும். முன்னால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்று தனி மதிப்பும் மரியாதை உள்ளது. அவர் பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதி என்றவர் நான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும்போது தொழில் வளர்ச்சிக்கு முயற்சிகள் எடுப்பேன். அதனால் மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறேன் என்றார்.