Skip to main content

“ஸ்டாலின் 200 என்று சொல்கிறார். நான், 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்கிறேன்” - உதயநிதி ஸ்டாலின்

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

“Stalin says 200. I say we will capture all 234 constituencies ”- Udayanidhi Stalin


‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டுவருகிறார். அதன்படி மணப்பாறையில் துவங்கிய தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி, திருச்சி மாநகரத்திற்குள் டி.வி.எஸ். டோல்கேட், பாலக்கரை அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். காந்தி மார்கெட் பகுதிக்குச் சென்ற அவர், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு என்.எஸ்.பி சாலையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு. சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க.வின் பூத் கமிட்டி உறுப்பினா்களோடு கலந்துரையாடினார்.

 


அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க. தலைவர் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொருவருக்கும் வலியுறுத்தி சொல்லியது ‘மக்களை நேரடியாகச் சென்று சந்தியுங்கள். அவர்களுடைய குறைகளை கேளுங்கள். மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என ஒவ்வொரு பிரிவினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அதில் தி.மு.க. அவர்களுக்கு என்ன செய்தது, அ.தி.மு.க. என்ன செய்யவில்லை என்பது உள்ளிட்ட பல தகவல்களை பெற்று வாருங்கள். அதை தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிடுவோம்’ என்று கூறியுள்ளார்.

 

கட்சியின் அனைத்து மூத்த முன்னோடிகளும் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுவிட்டார்கள். அவர்களும் சுழன்று பணியாற்றி கொண்டேதான் இருக்கிறார்கள். பிரச்சாரத்திற்கு நாங்கள் வந்துசென்றாலும், இந்தப் பணி இதோடு முடியவடையாது, இதே பகுதியில் இருக்கும் நீங்கள்தான் அதை தொடர வேண்டும். எங்களைவிட அதிக பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அ.தி.மு.க.வினர் தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

 


நாம் பாராளுமன்றத்தில் 39 சீட்டுகளில் 38 வெற்றி பெற்று இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற காரணமாக இருந்தது மக்கள்தான். எனவே, அவர்களை நேரில் சென்று சந்தியுங்கள். முனைப்போடு செயல்படுங்கள். வாக்காளர் பட்டியலை சரிபாருங்கள், தேர்தல் நேரத்தில் வாக்குப் பதிவு செய்ய வருகிறார்களா இல்லையா உள்ளிட்ட எல்லாவற்றையும் நீங்கள்தான் பார்க்க வேண்டும். 

 

தலைவர் ஸ்டாலின் 200 என்று சொல்கிறார். நான், 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்கிறேன். யாருடைய பேச்சையும் கேட்டு அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். 10 வருடம் நாம் ஆட்சியில் இல்லை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். நாம் ஜெயித்துவிடுவோம் என்று எந்த பத்திரிக்கை சொன்னாலும் அதெல்லாம் நம்பாதிங்க. முழு மூச்சோடு செயல்படுங்கள். தெற்கு மாவட்ட செயலாளர் எனக்கு பரிசாக மா, பழா, வாழை கொடுத்தார். இது எனக்கு பத்தாது எனக்கு நீங்கள் வெற்றி பரிசாக கொடுக்க வேண்டியது மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு இந்த தொகுதிகளை வெற்றி பெற செய்து கொடுக்க வேண்டும்” என்று பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்