தீவிர தமிழ்தேசிய ஆதரவாளரும், ஈழம் சார்ந்த அரசியல் கள செயல்பாட்டாளருமான கடலூரைச் சேர்ந்த கடல் தீபன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் கடலூருக்குச் சென்ற நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'கடல் தீபன் நினைவைப் போற்றும் வகையிலும் அவரது நினைவைப் பகிரும் வகையிலும் இங்கு கூடியிருக்கிறோம்' என்று கூறினார் . இந்தியாவின் எச்சரிக்கையை மீறி சீனாவின் உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது குறித்தான கேள்விக்கு " சீனா, இறுதிப் போர் முடிந்த உடனே இலங்கையின் கப்பல் உள்ளே வந்துவிட்டது. இறுதிப்போரில் இலங்கைக்கு மிக ஆதரவாக நின்று உதவியும் அதன் பொருட்டு உள்ளே வந்து துறைமுகங்கள், மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தருவதாகவும் கூறி கொண்டு இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு வரை கூட வந்து கூடாரம் அமைக்கிறது. இலங்கை இந்தியாவுடன் நட்பில் இருப்பதாகக் காட்டினாலும் அது எப்போதும் சீனாவின் பக்கமே நிற்கும். ஏனெனில் சீனாவும் பௌத்த நாடு, இலங்கையும் பௌத்த நாடு. ராஜபக்சே கூட 'தெற்கு ஆசியாவில் வலிமையான நாடு சீனாதான். இலங்கை அதன் பக்கமே நிற்கும்' என்று பேசியுள்ளார். எனவே இது இந்தியாவிற்கு பேராபத்தான நிலைதான். இதை இந்தியா எச்சரிக்கையுடன் அணுகவேண்டும். இதையும் மீறி இன்னும் இலங்கைக்குப் பணம் கொடுத்து உதவுவது, ஆயுதம் கொடுத்து உதவுவது, பயிற்சி கொடுப்பது ஆகியவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவை மீட்க குரல் கொடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை குறித்து கேட்டபொழுது, "குரல் நான் தான் கொடுக்கணும், அவர் மீட்கணும்; அவர் முழு அதிகாரத்தில் இருந்து கொண்டு எங்களுடன் சேர்ந்து கொண்டு அவரும் குரல் கொடுப்பேன் எனக் கூறினால் அவர் என்ன குரல் பதிவு கலைஞரா? இதெல்லாம் வேடிக்கை " எனக் கூறினார் .