Skip to main content

கௌரி லங்கேஷ் கொலையும் நாயின் மரணமும்! - ராம சேனா தலைவர் சர்ச்சைப் பேச்சு

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

ராம சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் மரணத்தை நாயின் மரணத்தோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

muthalik


 

 

மூத்த பத்திரிகையாளரும், தீவிர இந்துத்வ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ், கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, கொலையில் ஈடுபட்ட முக்கியக்குற்றவாளி பரசுராம் வகாமாரே உட்பட ஆறுபேரைக் கைது செய்துள்ளது.
 

இந்நிலையில், நேற்று ஸ்ரீராம் சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக், ‘கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியின்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் காங்கிரஸ் அரசின் தோல்வியைப் பற்றி யாருமே பேச முன்வரவில்லை. ஆனால், கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பலர் கௌரி லங்கேஷ் கொலை மரணம் குறித்து பிரதமர் மோடி பேசவேண்டும் என வலியுறுத்துகின்றனர். கர்நாடகாவில் ஏதோவொரு நாய் செத்துப்போனதைப் பற்றி மோடி ஏன் பேசவேண்டும்?’ என சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
 

 

 

கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட பரசுராம் வகாமாரே, ஸ்ரீராம் சேனா தலைவர் ப்ரமோத் முத்தாலிக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்