கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி ட்விட்டரில், "மோடி அவர்களே, வீர மரணம் அடைந்த பிரதமரின் மகனை துரோகி மீர் ஜாபர் என்று உங்கள் நண்பர்கள் அழைத்தனர். ராகுல் காந்தியின் தந்தை யார் என்று உங்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘காஷ்மீர் பண்டிட்டுகள் வழக்கத்தின்படி ஒரு மகன் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு முடி சூடி தனது குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பராமரிக்கிறார்’ என்று கூறினீர்கள். ஒட்டுமொத்த குடும்பத்தையும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தையும் அவமதித்த நீங்கள், நேரு என்ற குடும்பப் பெயரை ஏன் வைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேட்டீர்கள். ஆனால் எந்த நீதிபதியும் இதுவரை உங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவில்லை. உங்களை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை.
ராகுல் காந்தி உண்மையான தேசபக்தர். உங்கள் நண்பர் அதானியின் ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதால் நீங்கள் அதிர்ந்து போனீர்கள். இந்திய நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் பெரிய தலைவர்களை விட உங்கள் நண்பர் அதானி பெரியவரா. அப்படிப்பட்ட நீங்கள் எனது குடும்ப வம்சம் பற்றி பேசுகிறீர்கள். எங்கள் குடும்பம் ரத்தத்தால் இந்தியாவின் ஜனநாயகத்தை வளர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் குடும்பம் இந்திய மக்களின் குரலை உயர்த்தி, பல தலைமுறைகளாக உண்மைக்காக போராடியது. எங்கள் உடலில் ஓடும் ரத்தத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது உங்களைப் போன்ற கோழைத்தனமான, அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரியின் முன் ஒருபோதும் தலை வணங்காது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.