2019இல் நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் கன்னியாகுமாரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி திடீரென்று கரோனா பாதிப்பால் வசந்தகுமார் மறைந்ததால், தொகுதி உறுப்பினரின்றி காலியானது. இந்த நிலையில் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தோ்தலோடு காலியாக உள்ள கன்னியாகுமாரி நாடாளுமன்ற இடைத்தோ்தலும் நடக்கவிருக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கலும் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று (16.03.2021) தாக்கல் செய்தார். பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே 1991இல் இருந்து 8 முறை போட்டியிட்டு இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் ஓருமுறை 2011இல் நாகா்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது இவா் 10 ஆவது முறையாக தோ்தலில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த பின் பத்திரிகையாளா்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “தோ்தலில் எதிர்க்கட்சிகள் தங்களின் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க கடுகளவும் வாய்ப்பு இல்லை. ஜாதி, மதம் ரீதியாக உணா்வுகளைத் தூண்டிவிட்டு, அதில் குளிர்காய வேண்டுமென்று திட்டமிட்டு சில விசயங்களைப் பரப்பி வருகிறார்கள். மேலும் கடந்த தோ்தலின்போது கட்டி முடிக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் ஆடுகிறது என்று பொய் பரப்பினார்கள். பாலம் ஆடியது மக்களின் கண்களுக்குத் தொரியவில்லை. காங்கிரஸ், திமுகவினர் மற்றும் 6 எம்.எல்.ஏ’களுக்குத்தான் தெரிகிறது. அதன்பிறகு தோ்தல் முடிந்ததும் பாலம் ஆடுவது நின்னு போச்சு. மக்கள் விரும்பத்தகாத திட்டங்கள் எதுவும் கொண்டு வருவதில்லை.” என்றார்.