Skip to main content

கெஜ்ரிவாலின் வரிசையில் பினராயி விஜயன்; முதலமைச்சருக்கு வாழ்த்து

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Pinarayi Vijayan in Kejriwal's line; Congratulations to the Chief Minister

 

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் இதற்கு முன்பே தமிழக அரசிற்கும் ஆளுநருக்கு இடையே பல்வேறு முரண்கள் ஏற்பட்டு பரபரப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருந்தன.

 

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் வேண்டும் என ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

 

அதில், 'நமது நாட்டில் கூட்டாட்சி தத்துவம் படிப்படியாக மறைந்து வருவதை காண்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர், ஆளுநருடைய கடமைகள் குறித்தும், ஒன்றிய-மாநில அரசுகளின் கடமைகளும் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவை மதிக்கப்படுவதில்லை. இதனால் மாநில அரசின் செயல்பாடுகள் பெரும் பாதிப்படைகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மாநில ஆளுநர்கள் காலவரையறை இன்றி நிலுவையில் வைத்திருக்கின்றனர். இதனால் அந்தந்த மாநில செயல்பாடுகள் குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப் போய் இருக்கிறது.

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்தார் ஆளுநர். அவர் எழுப்பிய சந்தேகங்களுக்கு பலமுறை பதில் சொல்லி தெளிவுபடுத்தியும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதே நிலைதான் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகிறது. எனவே  அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி தீர்மானம் ஏற்றுவது ஏற்புடையதாக இருக்கும்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எழுதி இருந்த கடிதத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருந்த தீர்மானத்திற்கு பாராட்டுதலை தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநருக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டுதலை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல்பாட்டுக்கு கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும் அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்