அண்மையில் திருக்கோயில்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி கோவை இஸ்கான் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் வீட்டுக்குத் தீபாவளி ஸ்வீட் வாங்க வேண்டும் என்பதற்காக நம்ம ஊரில் இருக்கக்கூடிய சாதாரணமான அண்ணா கடைக்குப் போய் 'அண்ணா ஸ்வீட் கொடுங்க அரைக்கிலோ' என்று கேட்டேன். அவரிடம் கேட்டேன் எவ்வளவு டர்ன் ஓவர் பண்றீங்க என்று, அதற்கு அவர், 'நான் ஒரு நாளைக்கு 3000 ரூபாய்க்கு டர்ன் ஓவர் பண்ணுவேன்' என்றார். அதே நேரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 100 கோடி ரூபாய்க்கு மேல் எந்த கம்பெனி டர்ன் ஓவர் செய்கிறதோ அங்குதான் நாங்க தீபாவளி ஸ்வீட் வாங்குவோம் என்று சொல்கிறார். 100 கோடி ரூபாய்க்கு டர்ன் ஓவர் நடக்கிறதா என்று யார் கேட்பார்கள் என்றால், கார்ப்ரேட் பாலிடிக்ஸ் நடத்த வேண்டும் என்று நினைப்பவர்தான் கேட்பார்கள். அதனால் தமிழ்நாடு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எதற்காக தீபாவளி பண்டிகைக்கு பணியாளர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா, கட்டு மணியா என்பதை முதலமைச்சர் பார்க்க வேண்டும்''என்றார்.
இந்நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ள போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''எந்தவிதமான முறைகேடும் கிடையாது. டெண்டரை இன்னைக்கு தான் ஓபன் செய்கிறார்கள். அடையார் ஆனந்த பவன் உட்பட பெரிய பெரிய கம்பெனிகள் டெண்டர் போட்டிருக்கிறார்கள். முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. முன்பு இருந்த அரசு 262 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். இப்பொழுது இந்த அரசு, ஆவினில் வாங்கினால் 230 லிருந்து 240 ரூபாய் வருகிறது. டெண்டர் போட்டவர்கள் என்ன ரேட் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படி எந்தத் தவறுகளும் நடக்க வேண்டாம் என்றால் ஆவினில் வாங்கிட்டு போகிறோம். எந்தவிதமான தவறு நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முதல்வரும் அனுமதிக்கமாட்டார். இதில் எந்தவித தவறும் கிடையாது'' என்றார்.