Skip to main content

சென்னைக்கு மோடி வருகை! அமித்சாவுக்கு பறந்த தமிழக பாஜக பஞ்சாயத்து! 

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

 

இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை உலகமே உன்னிப்பாக கவனித்தப்படி இருக்கின்றன. இரண்டு நாள் அரசு முறைப் பயணத்திட்டமாக சென்னை வரும் சீன அதிபரை வரவேற்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை 11.15-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. இவரை வரவேற்பதில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது.      

 

Amit Shah



பிரதமர் மோடி சென்னை வரும்போதும், சென்னையிலிருந்து டெல்லிக்கு திரும்பும் போதும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அணி வகுத்து அவரை வரவேற்பதும் வழியனுப்பி வைப்பதும் ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த அணி வகுப்பில் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. 
 

அந்த வகையில், சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரம் வரும் மோடியை, சென்னை விமானநிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிஹாப்டரில் அவர் ஏறும் போதும், மாமல்லபுரத்தில் மோடி தங்கும் தாஜ் ஃபிஷர்மென் கேவ் நட்சத்திர ஹோட்டலிலும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதே போல திரும்பிச்செல்லும் போதும் இதே பாயிண்டுகளில் அவருக்கு வழியனுப்பு நிகழ்வும் நடக்கவிருக்கிறது. 


 

 

இந்த வரவேற்பு மற்றும் வழியனுப்பு நிகழ்வுகளில் தெலங்கானா கவர்னரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜனின் ஆதரவாளர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற அதிர்ப்தி தற்போது தமிழக பாஜகவில் வெடித்து வருகிறது. குறிப்பாக, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரரன், அரசக்குமார், எம்.என்.ராஜா, பாஜகவின் ஊடகப்பிரிவின் மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, துணை பொருப்பாளர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மோடியை வரவேற்கும் குழுவில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் தமிழிசையின் ஆதரவாளர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாக அவர்களை ஓரங்கட்டியிருக்கிறார்கள். மேலும் இவர்கள் அனைவரும் தமிழிசை கவர்னராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள். மரபுகளை புறக்கணித்துவிட்டு அதற்கு மாறாக, கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள சிலரை வரவேற்கு குழுவில் இணைத்துள்ளனர். இந்த விவகாரத்தால்  தற்போது தமிழக பாஜகவில் குமுறல்கள் எதிரொலிக்கின்றன. 


 

 

இது குறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ பிரதமரை வரவேற்பதில் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள், அணி தலைவர்கள், பொறுப்பளர்கள் என பலரும் பங்கேற்பார்கள். தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்த வரைக்கும் இந்த ப்ரோட்டகால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது தலைவர் இல்லை என்பதால் ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்கள். அதேசமயம், தமிழிசை ஆதரவாளர்கள் யாரும் பிரதமரை நெருங்கிவிடாதபடிக்கு ஒரு குரூப் காய்களை நகர்த்தியுள்ளது. அதன் ஒரு கட்டமாக மோடியை வரவேற்பதில் தொடங்கி நிகழ்ச்சியின் எந்த ஒரு இடத்திலும் மோடியை தமிழிசையின் ஆதரவாளர்கள் சந்தித்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக வேலைப் பார்த்துள்ளனர். அந்த வகையில் பிரதமரை வரவேற்பதில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்சியின் தேசிய தலைவர் அமீத்சாவிற்கு புகார்கள் பறந்திருக்கின்றன ‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழக பாஜகவினர்.  
 

 


 

சார்ந்த செய்திகள்