Skip to main content

“ஆளுநர் அரசியல் செய்கிறார்” - அமைச்சர் பொன்முடி

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

minister ponmudi says governor on political stand

 

ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கமிட்டியில் சிண்டிகேட் அமைப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவர், அரசால் நியமிக்கப்படுபவர் ஒருவர், ஆளுநரின் உறுப்பினர் ஒருவர் என மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த பட்டியல் எல்லாம் ஆளுநருக்கு அனுப்பிய பிறகு அவர் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், பல்கலைக்கழக மானியக் குழுவைச் சேர்ந்த ஒருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இது பற்றி எந்த சட்டமும் கிடையாது. இதன் மூலம் அளுநர் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்று இது போன்ற தவறுகளை எல்லாம் செய்கிறார்.

 

பல்கலைக்கழகங்களுக்கு அனைத்து விதமான அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆளுநர் பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று சொல்கிறார். முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி அந்த கூட்டத்திலேயே முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாடங்களை ஒழுங்காக நடத்த வேண்டும் என்றும் புதிய பாடத்திட்டங்களை கொண்டு வரவும் அறிவுறுத்தினார். என்னுடைய தலைமையிலும் துணை வேந்தர்கள் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். கடந்த ஆட்சியில் பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டுவிட்டன. இந்த தவறுகளை எல்லாம் தவிர்க்கவே முதல்வர் துணை வேந்தர்களை அழைத்து பேசி உள்ளார். ஆளுநர் பல்கலைக்கழகங்களில் என்ன நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

 

அண்ணாமலையே ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். இருப்பினும், ஆளுநர் பத்திரிகையில் அறிக்கை கொடுக்கிறார். பல்கலைக்கழகங்களில் இந்த தவறுகள் இருக்கிறது என இணை வேந்தராக இருக்கின்ற என்னிடமோ, உயர்கல்வித்துறை செயலாளரையோ அழைத்து இது குறித்து தெரிவிக்கலாம். இது பற்றி பத்திரிகைக்கு அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதிலேயே தெரிகிறது ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று. தவறுகளை முறையாகச் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கக் கூடாது. அதனால் துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்