Skip to main content

“பிரதமர் மோடிக்கு இது அழகல்ல” - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Minister Duraimurugan cricticizes pm modi

ஐந்தாவது முறையாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று (15-03-24) கன்னியாகுமரி பகுதி வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது. குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நாட்டை பிளவுபடுத்த நினைத்த மக்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி எடுபடாது. கொள்ளையடிப்பதை கொள்கையாகக் கொண்டது திமுக கூட்டணி. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி. திமுக - காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் நடைபெற்றது. ஹெலிகாப்டர் ஊழல் உள்பட பல்வேறு முறைகேடுகள் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழக மக்கள் காண தடை விதித்த கட்சி திமுக. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது” என்று பேசினார். பிரதமர் மோடி பேசியது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.1294 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் அளவில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த பாலத்தை திறந்து வைப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (16-03-24) வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக மற்றும் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்ததை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “பிரதமர் என்பவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், நம்முடைய மதிப்புக்குரியவர். மிகப்பெரிய ஸ்தானத்தில் இருப்பவர். அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை கூறியிருப்பது அவர் போன்ற பெரியவருக்கு அழகல்ல” என்று கூறினார். இதனையடுத்து அவரிடம், ‘தேர்தல் பத்திரம் விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்துவதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.