மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று (12/03/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாபநாசம் தொகுதியில் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமதும் போட்டியிட உள்ளனர்.
இந்த தேர்தலின்போது, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு மற்றும் தலைமைச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலில் மட்டும் இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சின்னம் ஒதுக்கீடு செய்ய முன்கூட்டியே நாங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு பொதுச் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் அச்சின்னத்தைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் பா.ஜ.க.வை சுமந்து அவர்களுக்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களும், அதேபோல் பா.ஜ.க.வுக்கு உதவ மறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்துக் கூட்டணி வேட்பாளர்களும் இந்த தேர்தலில் படுதோல்வியடைய 234 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் அயராது பாடுபவர்கள்.
தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழகத்திற்குப் புதிய விடியல் பிறக்கும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.