Skip to main content

பொடா – தடா – மிசாவை பார்த்தவர்கள் நாங்கள்... மு.க.ஸ்டாலின் பேட்டி 

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
M. K. Stalin


தமிழக அரசு சார்பில் தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் தொடர்பாக இன்று (24-10-2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜரானார். 
 

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர்,  
 

அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடைய மறைவுக்குப் பிறகு இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சார்பிலும் என் மீது ஏறக்குறைய ஏழு அவதூறு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது.
 

அதை நான் வரிசைப்படுத்தி சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வழக்காக என் மீது ஒரு வழக்கைப் போட்டார்கள். என் மீதும், என்னுடைய குடும்பத்தினர் மீதும் ஒரு தவறான அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். ஆகவே, அது நியாயமான குற்றச்சாட்டு அல்ல, பொய்க் குற்றச்சாட்டு என்பதை உணர்ந்து நானே நேரடியாக டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று என் மீது போடப்பட்டிருக்கக்கூடிய வழக்கு ஒரு பொய் வழக்கு என்றேன். என் மீது ஒரு FIR-யை இந்த ஆட்சி பதிவு செய்திருக்கிறது.  FIR என்று சொன்னால் First Information Report என்று அதற்குப் பொருள். ஆனால், என் மீது போடப்பட்டிருக்கக்கூடிய FIR -யை பார்க்கிறபோது Fraud Information Report என்று அன்றைக்கே நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காக ஒரு மான நஷ்ட வழக்கு என் மீது போடப்பட்டிருக்கிறது.
 

இரண்டாவதாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்த காரணத்தால் சென்னை மாநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த வெள்ளத்தில் சிக்கி பல வீடுகள் பறிபோயிருக்கிறது. ஆகவே, இதற்கெல்லாம் காரணம் இப்போது நடக்கக்கூடிய இந்த அ.தி.மு.க ஆட்சிதான் என்று தெளிவாக எடுத்துச் சொன்னேன். மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்று நான் தெளிவாக எடுத்துச் சொன்னேன். அதற்கு என் மீது வழக்கு போடப்பட்டது.
 

இதில் வேடிக்கை என்னவென்று சொன்னால், அந்த வழக்கு சம்பந்தமாக சாட்சியத்தை விசாரிக்கிறபோது அரசு தரப்பில் ஆஜரான சாட்சியர் திரு பரணிகுமார் என்பவர் அந்த சாட்சியத்தை சொல்லுகிறபோது தெளிவாக சொல்லியிருக்கிறார். ‘எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, மத்திய அரசு எச்சரிக்கை தாக்கீது அனுப்பி இருப்பதைத் தான் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார். வருவாய்த் துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயகுமார் அதை முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடத்திலே சொல்லவில்லை. அதனால்தான் இந்த ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் என்மீது ஒரு மான நஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கிறது.
 

அடுத்து சென்னையிலே காலரா நோய் பரவிய நேரத்தில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ‘vacation tour போயிருக்கிறார்’ என்று நான் பேசிய பேச்சுக்கு ஒரு மான நஷ்ட வழக்கு.
 

நான்காவதாக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சென்னை கோட்டையில் இருப்பதை விட கொடநாட்டிலே தான் அதிகம் தங்கி கொண்டு இருக்கிறார், என்று நான் பேசிய பேச்சுக்காக அதற்கு ஒரு மான நஷ்ட வழக்கு.
 

ஐந்தாவதாக, சட்டமன்றத்தில் மேட்டூர் அணையினுடைய நிலவரத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது அப்பொழுது அந்த துறை அமைச்சரும், இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிதான் பொதுப்பணித்துறை அமைச்சர். அவர் அதற்கு விளக்கம் சொல்லுகிற போது, ‘மில்லியன் கன அடி’ என்று சொல்ல வேண்டும். அதற்குப் பதில் தவறுதலாக ‘கன அடி’ என்று சொல்லிவிட்டார், இதைப்பற்றி நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை மறுத்தார்கள். அதனால், வெளியிலே வந்து உங்களைப் போன்ற ஊடகத் தோழர்களிடத்திலே நிருபர்களிடத்திலே இதுபற்றி நான் எடுத்துச் சொன்னேன். அதற்காக ஒரு மான நஷ்ட வழக்கு.
 

அடுத்து, ஆறாவதாக திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்திலே பேசுகிற போது, பல்கலைக் கழகத்தினுடைய விவகாரங்களை எல்லாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடம் மாநில அரசு அந்தப் பல்கலைக்கழக விவகாரங்களைக் கூட அடமானம் வைக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு எடுபிடியாக இந்த எடப்பாடி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் சொன்னேன். அதற்கு ஒரு மான நஷ்ட வழக்கு.
 

இதுபோன்று ஏழு மான நஷ்ட வழக்குகள் என் மீது போடப்பட்டிருக்கிறது. இதை நான் எந்த நேரத்திலும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.
 

இதில் வேடிக்கை என்னவென்று சொன்னால், மானம் போயிருக்கக்கூடிய அரசு இந்த எடப்பாடி பழனிசாமி அரசு. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது அது அவருடைய மானம். அடுத்து குட்கா புகழ் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் மீதும் பல அதிகாரிகள் மீதும், இன்றைக்கு பல வழக்குகள் புனையப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சூழ்நிலையிலே தான், அவர்கள் மானம் ஒரு பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு எங்கள் மீது போடப்பட்டிருக்கக்கூடிய இந்த மான நஷ்ட வழக்கை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தடாவை பார்த்தவர்கள், பொடாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள், அவர்களுடைய அம்மா ஜெயலலிதா போட்ட வழக்குகளை எல்லாம் சந்தித்தவர்கள் நாங்கள். எனவே, இதுபோன்ற மான நஷ்ட வழக்குகளை எல்லாம் சந்திப்பதற்கு நான் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய முன்னணித் தலைவர்களாக இருந்தாலும், செயல் வீரர்களாக இருந்தாலும், இந்த இயக்கத்தினுடைய தொண்டர்களாக இருந்தாலும் அதை எந்தச் சூழ்நிலையிலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்