Skip to main content

பா.ஜ.க.வின் கைப்பாவை..! அதிமுக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்..!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020
ks alagiri

 

 

பா.ஜ.க.வின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பதற்கு தொல்.திருமாவளவன் மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கே உரிய சான்றாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்ததாக மத்திய குற்றப்பிரிவு ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் அளித்த புகாரின் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. 

 

பெரியாரும், அம்பேத்காரும் சனாதன வர்ணாசிரம மனுஸ்மிரிதியில் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக எந்த கருத்துகளை கூறி வந்தார்களோ, அதற்கு வலிமை கூட்டுகிற வகையில் இணைய கருத்தரங்கில் தொல். திருமாவளவன் ஆற்றிய உரைக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதில் பேசப்பட்ட கருத்துகளை திரித்து, புனைந்து அவதூறு பிரச்சாரத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் செய்து வருகின்றனர். இதற்கு துணை போகிற வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, தொல். திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும். 

 

எனவே, பா.ஜ.க.வின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பதற்கு தொல்.திருமாவளவன் மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கே உரிய சான்றாகும். இத்தகைய வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், தொல். திருமாவளவனுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் துணை நிற்பார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்