ஜூலை மாதம் 24-ந் தேதியோடு தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் ஒரு ராஜ்யசபா எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டுக்கள் தேவை. அதன்படி பார்த்தால், அ.தி.மு.க. 3 எம்.பி.க்களையும், தி.மு.க 3 எம்.பி.க்களையும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்க முடியும்.
அதனால் அதிமுகவில் இந்த ராஜ்யசபா சீட்டைக் கேட்டு, தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அன்வர்ராஜா, மைத்ரேயன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வேணுகோபால்ன்னு ஒரு பெரிய டீமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் பா.ம.க.வுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்குவது தொடர்பான அ.தி.மு.க. நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவிடம் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக கேட்டுள்ளதாம். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கிடுங்கள் என எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விவாதிக்கவும், மீதமுள்ள ஒரு ராஜ்ய சபா பதவியை கட்சியில் உள்ள யாருக்கு வழங்கலாம் என்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை செய்தார் எடப்பாடி பழனிசாமி. 10க்கும் மேற்பட்டவர்கள் முட்டி மோதுவதால் தடுமாற்றத்தில் உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.