Skip to main content

அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் முதலமைச்சரை அவதூறாக விமர்சிக்கலாமா?.. திருத்தணிகாசலத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி..

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
high court chennai

 

அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பில் இருக்கக்கூடிய முதலமைச்சர் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

கரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அவை தமிழக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும், சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக திருத்தணிகாசலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த நிலையில்; குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

அவரின் தந்தை கலியபெருமாள்,  குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வு கடந்த முறை விசாரித்தபோது, திருத்தணிகாசலம் சித்த மருத்துவர் அல்ல என்றும், அவர் விசாரணைக்கு அளித்துள்ள சான்றுகள் போலியானவை எனவும்,  காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதைப் பதிவு செய்த நீதிபதிகள், சித்த மருத்துவத்தின் மீது அரசு வெறுப்பு காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், சித்த மருத்துவ சிகிச்சை தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, தமிழக அரசும், மத்திய ஆயுஷ் அமைச்சகமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவை நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாததால், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

அப்போது திருத்தணிகாசலம் தரப்பில், சித்த மருத்துவத்தை முறையாகப் படிக்கவில்லை என்றாலும், பரம்பரை வைத்திய முறை மற்றும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. மேலும், கரோனாவுக்கு எதிரான சித்த மருந்தை தான் கண்டுபிடித்திருப்பதாகவும், அதன் மூலப்பொருட்கள் குறித்து மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பிய கடிதம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.  அதனால்,  தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சித்த மருத்துவத்தில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்கிறோம். சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக்கொண்டு,  உரிய அங்கீகாரமோ,  தகுதியோ பெறாத நிலையில், திருத்தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் அதேநேரத்தில், அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரைப் பற்றி,  சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா எனக் கேள்விகள் எழுப்பினர். மேலும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது, தற்போதைய நிலையில்,  எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

இதன் பின்னர், திருத்தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் கரோனா தடுப்பு மருந்து குறித்த விண்ணப்பத்தின் மீது எடுத்த நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்