Skip to main content

’ததும்பி வழிந்த என் கண்ணீரை துடைத்தார் அண்ணன் ஸ்டாலின்’ - உருகிய டி.ராஜேந்தர் 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
t r

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதாக வந்த அறிவிப்பை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

 

லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் இன்று கோபாலபுரம் வந்து கலைஞரின் நலம் விசாரித்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’ வரலாற்றில் ஒரு மைல்கல்லை பதித்திருக்கிறார் கலைஞர்.   50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்தை கட்டிக்காக்கக்கூடிய தலைவர் கலைஞரைத்தவிர வேறு யாரும் இல்லை.   பள்ளிப்பருத்தில் பிஞ்சு மாணவனாக இருந்த காலத்தில் இருந்து திமுகவில் உள்ளவன் நான்.  கலைஞரை குருவாக ஏற்றுக்கொண்டவன் நான்.   என்னில் பாதி  என்று கலைஞர் என்னை சொல்லும் அளவிற்கு என் வாழ்கையில் நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் கலைஞர்.  

கலைஞரின் ஒரு அசைவுக்கான தமிழகமே இன்று ஸ்தம்பித்து நிற்கிறது.   அவரின் உடல்நலம் சற்று நலிவுற்றுள்ளது என்று கேள்விப்பட்டதும் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று நான் ஓடோடி வந்திருக்கிறேன்.   கலைஞரை என்னால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. ஆனால், செயல் தலைவர் ஸ்டாலின் எனக்கு அண்ணனாக இருந்து என் கைகளை பிடித்துக்கொண்டார்.  அப்போது ததும்பி வழிந்த  என் கண்ணீரை துடைத்தார்.   அது எனக்கு ஆறுதலாக இருந்தது.   அந்த ஆறுதலுக்காகத்தான் வந்தேன்.  நான் முகத்தை காட்ட வந்தவன் அல்ல; அகத்தை காட்ட வந்தவன். 

 என்னைதான் நான் வெளியே இருந்தாலும்.  இன்றைக்கும் நான் கலைஞரின் போர்வாள்தான்.  முத்திரை பதித்த கலைஞருக்காக  திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக, பிரச்சார பீரங்கியாக, கலைஞரால்  மாநில சிறு சேமிப்பு துறை தலைவராக  ஆக்கப்பட்ட பாக்கியம் பெற்றவன்.’’

என்று உருக்கமுடன் தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்