திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் முருகையன். மறைந்த இவருக்கு பேரன் உறவுமுறையான தொழிலதிபர் தணிகைவேல்; ம.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. எனப் பல கட்சிகள் மாறியவர். சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும், பைனான்ஸ் பார்ட்டியாகவும் இருக்கிறார்.
தற்போது, ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் தணிகைவேல், திருவண்ணாமலையில் தனது ஆதரவாளர்கள் உள்ள சமுத்திரம் காலனி, கல்நகர், தியாகி அண்ணாமலை நகர், பேகோபுரம் தெரு, செட்டிக்குளமேடு, ஆடையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏழ்மையானவர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான 10 கிலோ அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், கடுகு, மிளகாய்த்தூள், சோப்பு எனத் தலா ரூ.600 மதிப்புள்ள தொகுப்பை வழங்கிவருகிறார். குறிப்பாக, இந்தப் பொருட்களை நேரடியாக வழங்காமல், அந்தந்த பகுதிகளில் இருக்கும் இளைஞர் அமைப்புகள் மூலமாகவே மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். முதல் இரண்டு கட்டமாக மூவாயிரம் குடும்பங்களுக்கும், மூன்றாவது கட்டமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருவதாகத் தணிகைவேல் நம்மிடம் தெரிவித்துள்ளார். சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் ஒரு தொழிலதிபர் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்திருப்பது ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாரபட்சமில்லாமல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க.வில் இணைவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம் தணிகைவேல்.