தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. அதற்கு வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கள் கடந்த 12ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 15ஆம் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என அரசியல் கட்சியினர் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், கருப்பணன் பவானியிலும், ஜே.கே. என்கிற ஜெயக்குமார் பெருந்துறையிலும், ஈரோடு மேற்கு வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் ஈரோடு கோட்டாச்சியரிடமும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள த.மா.கா. வேட்பாளர் யுவராஜாவும் ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர்கள், புதன்கிழமை வேட்பு மனு கொடுப்பதாகக் கூறினார்கள்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்கு அமைச்சர் தங்கமணி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 15ஆம் தேதி மதியம் 12 வரை எமகண்டம் என்பதால், அது முடிந்த பிறகு அனைத்து வேட்பாளர்களும் மதியத்திற்கு மேல் நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகள் வேட்பு மனு கொடுப்பது முடிந்ததும் வாக்குச் சேகரிக்க தீவிரமாகக் களம் இறங்கி தேர்தல் களத்தை அனலடிக்கவுள்ளனர்.