ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.
அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் தனித்துப் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று மாலை உயர்மட்ட குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சியினருக்கும்; யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.