Skip to main content

வி.பி.துரைசாமி குறித்து விமர்சித்த இ.பி.எஸ்.! வலுக்கிறதா அதிமுக - பாஜக பனிப்போர்?

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

EPS criticizes VP Duraisamy

 

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக மூத்தத் தலைவர் பொன்னையன், “அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் எனும் மறைமுக பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இதில் நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய தேவை இருப்பதால் நான் சொல்கிறேன். முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என எதற்கும், தமிழ்நாட்டில் பாஜக குரல் எழுப்பவதே இல்லை. இது மக்களுக்கு புரிய வேண்டும்” என்று பேசியிருந்தார். 

 

அதேபோல், பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, 66 எம்.எல்.ஏக்களை கொண்ட அதிமுக எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை. நான்கு எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய இபிஎஸ், “நாட்டு மக்களின் பிரச்சனைகளை புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்தில் நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எடுத்து கூறுகிறோம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதே போன்று சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் எவ்வாறு பேசுகிறார்? என்பதும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

 

எனவே வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை. அவர் எந்தக் கட்சியில் இருந்து எந்தக் கட்சிக்கு சென்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் 1974-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தேன். 48 ஆண்டு காலமாக ஒரே இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறேன். அதே போன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்