Skip to main content

“அதிமுக நிர்வாகிகள் மீது தேடி தேடி வழக்கு போடுகிறார்கள்” - தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ்.

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Edappadi Palanisamy campaign at virudhunagar

 

சிவகாசி மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

 

ராஜேந்திரபாலாஜி மைக் பிடித்தபோது “யாரைக் கண்டும் ஓடி ஒளியப்போவதில்லை. யாருக்கும் பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன். இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லி, அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தாலே வெற்றி பெற்றுவிடுவோம்” என்று பேசியவர், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவற்றை அதிமுக அரசின் சாதனைகளாக பட்டியலிட்டார். 

 

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்கிறார்? ஒருநாள் வாக்கிங் போவதாக செய்தி வருகிறது. ஒருநாள் சைக்கிளில் போவதாக செய்தி வெளியாகிறது. ஒருநாள் டீ கடையில் டீ குடிப்பதாக போட்டோ போடுகிறார்கள். ஒருநாள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் வெளிவருகிறது. ஒன்றிரண்டு இடங்களுக்கு போய் ஆய்வு செய்ததாக போட்டோ எடுத்து செய்தி வெளிவர செய்வது. மக்களை ஏமாற்றி முதலமைச்சராக வந்தவர், மக்களை ஏமாற்றத்தான் செய்வார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார். கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகா கொண்டு செயல்படுகின்றனர். கொள்ளையடிப்பது மட்டுமே அவர்களின் பிரதான வேலையாக இருக்கிறது. எந்த துறையில் எப்படியெல்லாம் கொள்ளையடிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு கொள்ளையடிக்கிறார்கள். 

 

Edappadi Palanisamy campaign at virudhunagar

 

கட்சியை உடைக்கும் எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள் போடுகிறார்கள். ராஜேந்திரபாலாஜி மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை. சர்வாதிகார அரசாங்கம் நடக்கிறது. நியாயத்தை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. ஒரு பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். மக்கள் பிரச்சனைகளைவிட, தன் குடும்பத்தை மட்டுமே பார்க்கிறார். 

 

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடிக்காக 48 லட்சம் பேர் காத்திருந்தனர். ஆனால், 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறிவருகிறது திமுக அரசு. 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், திமுக அரசைக் கொண்டுவந்ததற்கான தண்டனையாக, 12 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டிவருகின்றனர். பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அதிமுக அரசு மக்களுக்கு ரூ.2500 கொடுத்தது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஸ்டாலின், ரூ.5000 கொடுக்கச் சொன்னார். இப்போது, முதலமைச்சராக இருக்கிறார். 100 ரூபாய் கூட தரவில்லை. இப்போதுதான், திமுக ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்கள் புரிந்துள்ளனர்” என்று பேசி வாக்கு சேகரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்