Skip to main content

“பாசிசத்தை எதிர்க்க திமுக தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து இயங்கும்” - முத்தரசன்  

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

CPI Mutharasan addressed press

 

"பிரதமர் மோடி மக்கள் விரோத தலைவர், பாசிசத்தை எதிர்க்க திமுக தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயங்குவோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட 24ஆவது மாநாடு கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரம் பகுதியில்  நடந்தது. பேரணியோடு தொடங்கிய மாநாட்டில் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டம் போன்ற பல்வேறு நிலைகளில் விவாதம் நடத்தி மாநாட்டின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.      


மாநாட்டில் பங்கேற்ற இரா,முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் 6,7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் நகரில் நடைபெறுகிறது. இந்திய விடுதலை போராட்டத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி மிக முக்கிய நாளாகும். அதாவது வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்த இந்நாளில் மக்கள் விரோத ஜனநாயக விரோத சர்வாதிகார மோடி அரசே வெளியேறு என முழக்கம் முன்வைக்கப்படும். மோடி அரசு அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையையும் பன்மடங்கு உயர்த்தி உள்ளது. குறிப்பாக அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய பொருளுக்கு ஜி.எஸ்.டி வரியை போட்டு மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வராவிடில் இலங்கையில் ஏற்பட்ட நிலை இந்தியாவில் ஏற்படும் புரட்சி வெடிக்கும்.

 

கர்நாடக அணைகளில் உள்ள நீரை தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் வேறு வேலையை செய்துவருகிறது. தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி அதன் அடிப்படையில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளது. மின்கட்டண உயர்வால் சாதாரண, ஏழை எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கக்கூடும். எனவே மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிடுவதோடு, ஒன்றிய அரசு மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மானியம் வழங்கப்படும் என நிர்பந்தம் செய்தால் அதனை எதிர்ந்து அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்.


சென்ற ஆண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டி பயிர் இன்சூரன்ஸ் வழங்காமல் பெருமளவில் பாக்கியுள்ளது. குறுவை சாகுபடிக்கான பயிர் இன்சூரன்ஸ் அரசு அறிவிக்க முன்வரவேண்டும். பயிர் இன்சூரன்ஸ் தனியாரிடம் இருந்தால் முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரங்களை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க முன்வரவேண்டும். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தற்போது நடைபெற்ற சம்பவம் போன்று தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 


17 ஆண்டுக்கு முன்பு அதாவது 2005ஆம் ஆண்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பள்ளிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. இந்த பள்ளி நிர்வாகம் என்பது முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சியின் வகுப்புவாத சக்திகள் நடத்தும் பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியை நிர்வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியும், தமிழகத்தில் ஆளும் அரசு நிர்வாகம் இணைந்து செயல்படும் சூழ்நிலையால் இந்தப் பள்ளியில் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மக்கள் விரோத தலைவர் ஒரு பாசிஸ்டை எதிர்க்க திமுக தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயங்கும்" எனத்  தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்