Skip to main content

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவது எப்போது? புகழேந்தி பதில்

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
pugazhendhi

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழுக் கூட்டம் 18.09.2020 மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அன்று மதியம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளருமான அன்வர்ராஜா, "சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனைப் பொறுத்துத்தான் அரசியலில் தாக்கம் இருக்கும்" என்றார். 

 

கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவது, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் கட்சியை எப்படிக் கட்டுக்குள் வைப்பது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காகவும், முடிவு எடுப்பதற்காக உயர்மட்ட குழுக் கூட்டம் மாலையில் நடக்க இருந்த நேரத்தில், அதற்கு முன்னதாக அன்வர்ராஜா தெரிவித்த கருத்து அதிமுகவினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. மாலையில் நடந்த அதிமுக உயர்மட்ட குழுக்கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

 

இந்த நிலையில் நம்மிடம் பேசிய அதிமுகவின் புகழேந்தி, ”அன்வர்ராஜாவின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. அது அவரது சொந்தக் கருத்தாக இருக்கலாம். சசிகலா வந்தால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அமமுகவில் நான் இருந்தபோது பலமுறை சசிகலாவைச் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் அரசியலில் எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. சிறையிலிருந்து அவர் வந்த பிறகுதான் அரசியலில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். 

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதலமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சராகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமி இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வமும் ஒப்புக்கொண்டு மிகவும் சுமூகமாக சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை.

 

இன்னும் தேர்தலே வரவில்லை. தேர்தலுக்கு முன்பாக நிச்சயமாக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்படும் வேட்பாளரை முன்னிறுத்தித்தான் தேர்தலைச் சந்திப்போம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, தேர்தல் அறிக்கையோடு முதல்வர் வேட்பாளர் அறிவிப்பும் வெளியிடப்படும். நிச்சயமாகக் கட்சியின் தலைமை இதனைச் செய்யும் என்றார் நம்பிக்கையுடன். 

 

 

சார்ந்த செய்திகள்