Skip to main content

''முறிஞ்சது முறிஞ்சதுதான்; புதிய கூட்டணி குறித்து இபிஎஸ் பரபரப்பு பேட்டி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

The chief minister is telling lies" - Edappadi Palaniswami interview

 

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அண்மையில் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பாஜக தரப்பினை சேர்ந்த வி.பி.துரைசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர், அதிமுக தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூட்டணியை புதுப்பிப்பது குறித்து பேசி வருகிறோம் என தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வு. அதனாலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்துள்ளது. எங்களுடைய புதிய கூட்டணி குறித்து தகவல்களை விரைவில் நாங்கள் தெரிவிப்போம். அதிமுக தலைவர்களிடம் பாஜக தலைமையில் பேசி வருவதாக வி.பி.துரைசாமி சொன்ன கருத்திற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். அது அவருடைய கருத்து. இரண்டு கோடி தொண்டர்களுடைய உணர்வுகள் தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இதை வேண்டுமென்ற தினம் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியை பற்றிதான் நாங்கள் பேச முடியும்.

 

மக்களுடைய மனது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும். ஏன் என்று சொன்னால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகளை நீங்கள் ஒன்றாக சேர்த்து பார்த்தால் ஏழு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து ஐயாயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம். சிதம்பரத்தில் 324 வாக்குதான் குறைவு, ஈரோட்டில் 7800 வாக்குதான் குறைவு, நாமக்கல்லில் 15,400 வாக்குகள்தான் குறைவு. இந்த மூன்று தொகுதிகளில் கிட்டத்தட்ட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இவை எளிதாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்.

 

கள்ளக்குறிச்சி 20,000 ஓட்டில், வேலூர் 27,000 ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். காஞ்சிபுரத்தில் 42,000, கடலூரில் 50,000 என  இப்படி பல நாடாளுமன்ற தொகுதிகளில் 50,000 வாக்குகளுக்கு குறைவாக கிட்டதட்ட 10 இடங்கள் இருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் கீழ ஏழு இடங்கள் இருக்கிறது. இந்தமுறை 40 இடங்களிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார், திமுகவின் தலைவராக தேர்தல் அறிக்கை வெளியிட்டார். சுமார் 520 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 10% அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் பேட்டி கொடுக்கிற பொழுது 95 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பச்சை பொய் சொல்கிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்