தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் நேற்று (18-12-23) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் முன் உரையாற்றினார். அப்போது அவர், “தமிழகம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். திராவிட கட்சிகளால் தமிழகத்தில் முன்னேறத்தையோ, மாற்றத்தையோ கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு கைரேகை தேய்ந்தது தான் மிச்சம்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகாலமாக எல்லாவிதமான அரசியலையும் நாம் பார்த்துவிட்டோம். ஆனால், கிராமங்கள் தொய்வடைந்த நிலையிலும், விவசாயிகள் நலிவடைந்த நிலையிலுமே இருக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றடைய வேண்டுமென்றால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். பா.ஜ.க.வினர் இந்தியை திணிக்கின்றனர் என்று சொல்லி சொல்லி தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. இனிமேல் நாம் திமுக அரசை நம்பபோவதில்லை.
அவர்கள் வழங்கும் திட்டத்தை திமுக கரைவேட்டி அணிந்தவர்களை பார்த்து தான் வழங்கியுள்ளனர். நாங்கள் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வந்துள்ளோம். மோடி, இந்தியை திணிக்கவில்லை, தமிழைத்தான் திணிக்கிறார். மோடி, இந்தியில் பேசுவதை நேருக்கு நேராக தமிழில் மொழி மாற்றம் செய்யும் வசதியை கொண்டு வருவதற்கான முயற்சி நடக்கின்றன. எதிர்காலம், நமது பா.ஜ.க தான். ஆண்ட கழகங்கள் நமக்கு வேண்டாம். அவர்கள் நமக்கு தேவையில்லை என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.