Skip to main content

“நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கிவிடக்கூடாது”- தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை 

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Anbumani Ramadoss warning on Meghadatu issue

 

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்” என்று கர்நாடக  துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

 

பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது.  தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்கூடாது.

 

மேகதாது அணை விவகாரத்தில்  தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன்  நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா?

 

2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000  கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக  வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன.  பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர்.  ஆனால்,  அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

 

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது.  மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை  முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்