திருவண்ணாமலை மாவட்டம், போளுர் பேரூராட்சியில் கல்வி நிலையம் வைத்து நடத்தி வருபவர் சி.ஏழுமலை. காண்ட்ரக்ட் தொழிலும் செய்து வருகிறார். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருந்து வந்தார் ஏழுமலை. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நவம்பர் 7ந்தேதி பாஜகவில் இணைந்தார்.
இதற்கான போளுர் நகரத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணனை வரவைத்து தன் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் கட்சியில் இணைந்துள்ளார். இணைப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "திருவள்ளுவரை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. காவி நிறம் என்பது பாஜகவின் நிறம்மல்ல, அது பொதுவான நிறம், அந்த நிறத்தில் படம் வெளியிடுவது என்ன தவறு என கேள்வி எழுப்பினார். அயோத்தி வழக்கில் எப்படிப்பட்ட தீர்ப்பு வந்தாலும் அதனை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்" என்றார்.
திமுகவில் ஒ.செவாக இருந்துள்ளார் ஏழுமலை. திமுகவில் இருந்தபோது இவரது மனைவி சேத்பட் ஒன்றிய சேர்மனாக இருந்து வந்தார், பின்னர் இவரது தம்பி மனைவி அதே பதவியில் இருந்தார். போளுர் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் கேட்டு திருவண்ணாமலை தெற்கு மா.செ எ.வ.வேலு மூலம் முயற்சி செய்தார், கிடைக்கவில்லை, தனது மகன் செந்தில்குமார்க்கு எம்.பி சீட் கேட்டார், அதுவும் கிடைக்கவில்லை. இதனால் வேலுவை விமர்சனம் செய்துவிட்டு 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று கணிசமான ஓட்டுக்களை வாங்கினார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் அங்கு சென்று அடைக்கலமானார். ஜெ மறைவுக்கு பிறகு அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டதும் தினகரன் பின்னால் சென்றார். தினகரனின் அமமுகவின் வடக்கு மா.செவாக இருந்தார். பின்னர் அமைப்பு செயலாளராகப்பட்டார். அமமுகவில் இருந்தாலும் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் சிபாரிசில் சில காண்ட்ரக்ட் வேலைகளை எடுத்து செய்து வந்தார்.
அதிமுக மற்றும் அமமுகவில் தன்னை சரியாக மதிக்கவில்லை என்பதால் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமென திமுக மா.செ எ.வ.வேலுவுக்கு தூதுமேல் தூதுவிட்டார். கட்சியில் இருந்த போதே தன்னை விமர்சித்தவர், மீண்டும் கட்சிக்குள் வந்தால் தொகுதியில் வீணாக பிரச்சனைகள் வரும் என யூகித்து அவரை கட்சியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் பாஜகவுக்கு சென்று தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளார்.
அவர் கட்சிகளில் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பதற்கு முக்கிய காரணம், அவரின் கல்வி நிலையம் சொந்தயிடத்தில் கட்டப்பட்டுயிருந்தாலும் அரசு, நீர்நிலை பொறம்போக்குயிடத்தை ஆக்கிரமித்துயிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. தன்னுடைய கல்வி நிலையத்தை காத்துக்கொள்ளவே பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள் போளுர் நகர அதிமுகவினர்.