நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோற்கும். சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி நீடிக்க முடியாத நிலை அதிமுகவுக்கு வரும். அந்த தோல்விக்கு அமமுக காரணமாக இருக்கும். அமமுக ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க அதிமுகவை மிரட்டும் என்று அக்கட்சியினர் பேசி வந்தனர். ஆனால் அதிமுக ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது. அமமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது.
தேர்தலுக்கு முன்பே ஓ.பி.எஸ். தரப்பு, இ.பி.எஸ். தரப்பு சசிகலாவை இருகட்சிகள் இணைப்பு சம்மந்தமாக சந்தித்தது. அப்போது சசிகலா ஒப்புக்கொள்ளவில்லை. அதிமுக தோல்வியடைய வேண்டும், அதுவும் அமமுகவால் தோல்வியடைய வேண்டும், அமமுக மூன்று, நான்கு எம்எல்ஏக்கள் வெற்றி பெறும் என்றுதான் சசிகலா விரும்பினார். அப்போதுதான் அதிமுக - அமமுக இணையும், அப்போது தனக்கும், தினகரனுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால் தேர்தல் முடிவுகளை பெங்களுரு சிறையில் இருந்த சசிகலா அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.
தற்போது அதிமுக ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றதால், சசிகலா உதவி தேவையில்லை என்ற முடிவுக்கு அதிமுக தலைமை நிர்வாகிகள் வந்துவிட்டனர். அதிமுக அமமுக இணையுமா என்ற கேள்வி வரும்போது, இந்த தேர்தலுக்கு முன்பே இணைந்திருந்தால் அதிமுகவில் சசிகலா, தினகரன் இருவருக்கும் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். ஆனால் இனி அந்த முக்கியத்துவம் கிடைக்காது. அந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமி தனது நிலையை உயர்த்திவிட்டார்.
அதிமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது என்றால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம்தான். அவர் நாடாளுமன்றத் தேர்தலைவிட இடைத்தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது எனது அரசியல் பயணம் இனிதான் ஆரம்பம், இனிதான் எடப்பாடி பழனிசாமியை பார்ப்பீர்கள் என்றார். அதைன்படியே தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ளார் என்கிறார்கள் அதிமுகவினர்.