நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. இதற்கு தேமுதிக தலைமையிடம் இருந்து தேர்தல் நிதி கொஞ்சம் கூட தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். தொண்டர்களும் விஜயகாந்த் முன்பு மாதிரி கட்சி பணியில் இல்லை. அவரது குடும்பம் கட்சியை வழி நடத்தும் விதமும் சரியில்லை என்று புலம்பி வருகிறார்கள்.
இதனால் தேமுதிக தனது வாக்கு வங்கியை இழந்தது மட்டுமில்லாமல் கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. தேமுதிக வாங்கிய ஓட்டு சதவிகிதத்தால் பாஜக மற்றும் அதிமுக தலைமைக்கு பெரும் அதிருப்தி நிலவியது. இதை அறிந்து கொண்ட தேமுதிக தலைமை அதிமுக மற்றும் பாஜக அறிவிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் தானாக முன்வந்து ஆதரவு கொடுத்து வருகிறது. இதற்கு ஒரு படி மேல் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று பிரேமலதா அறிவித்தார். இது தொண்டர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்கின்றனர்.
இதனையடுத்து கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நல்ல வரவேற்பு இருந்ததால் தேமுதிகவை கழட்டி விட்டு கமலை கூட்டணியில் சேர்க்க அதிமுக முயற்சி செய்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். இதன் பின்னணி பற்றி விசாரித்த போது, நடந்து முடிந்த தேர்தலில் புது வாக்காளர்கள் வாக்குகளை கமல் கட்சி அதிகமாக வாங்கியதே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் கமல் கட்சி தேமுதிகவை விட அதிக வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றதாகவும், நகர்புற பகுதியில் கமல் கட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதும் ஒரு காரணமாக தெரிவிக்கின்றனர்.