சென்னை தியாகராய நகர் போக் சாலையில் உள்ள சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்தோம். அந்த வகையில் அம்மா உணவகத்தையும் பின்பு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் தொடங்கினோம். அதனை தற்போது நகர்ப்புற நல்வாழ்வு மையம் என்று பெயர் மாற்றி உள்ளனர். அதிமுக கொண்டு வந்த திட்டத்தில் லேபிள் மாற்றி லேபிள் ஒட்டுவதைத்தான் திமுக அரசு செய்து கொண்டு இருக்கிறது. குழந்தைகள் ஒரு வேளை உணவாவது உண்ண வேண்டும் என்றும், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களை எம்ஜிஆர் கொண்டு வந்தார். அதன் மூலம் குழந்தைகளுக்கு மேலும் சத்து உருண்டைகள், காலணிகள், சீருடைகள் வழங்கும் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள்.
இதனை ஐ.நா சபையே பாராட்டியது. எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டத்தால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தனர். இந்தத் திட்டங்களை எல்லாம் மூடு விழா செய்வது என்பது நிச்சயமாக ஜனநாயக விரோத செயலாகவும், மக்கள் விரோத செயலாகவும் உள்ளது. இதனை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் அதற்குரிய பதிலை பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அளிப்பார்கள். இது எல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்” எனத் தெரிவித்தார்.