Skip to main content

"எடப்பாடி பழனிசாமிக்கு திமுக விளக்கமளிக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

admk jayakumar talks about edappadi palanisamy son america trip related

 

"ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி, தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்போது மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.

 

அதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்பி வருகிறார். அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டு ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர்களின் மேல் உள்ள சொத்துக்குவிப்பு வழக்குகளை திசை திருப்புவதற்குத் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புகிறார். 

 

‘முதலீடு’ என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப்போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. 2015-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘அதிமுக மாநாடு!’. எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!.

 

போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எனக் "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனை தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு! அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்தி "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?

 

ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும் விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும் இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள், போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார். 

 

ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக அவதூறாக கீழ்தரமாகப் பேசி அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

admk jayakumar talks about edappadi palanisamy son america trip related

 

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இன்று வரை பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்கி வருகின்றன என்றும், திமுக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் இந்த ஆட்சியில் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.  இதற்கு புள்ளிவிவரங்கள் மூலம் பதில் அளிக்க முடியாத நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி மகன் அமெரிக்கா சென்றார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகிக்கும் போதோ, அதற்கு முன்போ அல்லது இன்று வரையிலோ எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அமெரிக்கா சென்றதில்லை. எடப்பாடி பழனிசாமி மகன் அமெரிக்கா சென்றார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ அல்லது அமைச்சர் தங்கம் தென்னரசோ நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி மக்கள் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திமுக எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கத்தை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்