Published on 12/09/2019 | Edited on 12/09/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது.
மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து தினகரனுக்கும், சசிகலாவுக்கும் வலது கரமாக இருந்த புகழேந்தி அக்கட்சியில் இருந்து வெளியேற போகிறர் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் செந்திலுக்கு அமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் வெளியேறும் நிலையில் நடிகர் செந்திலுக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.