Skip to main content

7 தமிழர்கள் விடுதலை: மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
rahulgandhi


சட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். தில்லியில் தம்மை சந்தித்த இயக்குனர் இரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
 

 

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்ற போதிலும், அவர்கள் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு கடந்த 28 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் கூட சிறைவிடுப்பு வழங்கப்பட்டதில்லை. 7 தமிழர்களில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலத்தை விட கூடுதலாகவே சிறைவாசத்தை அனுபவித்து விட்டால் அவர்களை விடுவிப்பது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என்றும் ஆணையிட்டது. அதன்படி அவர்களை விடுதலை தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.

குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்சநீதிமன்றம்  உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி ராஜிவின் மனைவியும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கேட்டுக் கொண்டதால் தான் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுனர் ஆணையிட்டார். அதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
 

 

 

ராஜிவ் கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அமர்வின் தலைவரான நீதியரசர் கே.டி. தாமஸ், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் நேரம் வந்து விட்டதாக தொடர்ந்து கூறிவருகிறார். இதுதொடர்பாக கடந்த 18.10.2017 அன்று ராஜிவின் மனைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதிய நீதிபதி கே.டி. தாமஸ்,‘‘ ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்ட நிலையில், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி  விடுதலை செய்யும்படி நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர். இந்த விஷயத்தில் நீங்கள் தான் பெரிய மனதுடன் செயல்பட்டு விடுதலை செய்ய வைக்க வேண்டும். அது உங்களால் மட்டும் தான் முடியும்’’ என்று  குறிப்பிட்டிருந்தார்.
 

எனினும், அவரது கடிதத்திற்கு சோனியா பதிலளிக்கவில்லை; 7 தமிழர்களை விடுவிக்க பரிந்துரையும் செய்யவில்லை. ஆனால், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், சோனியாவிடம் நீதிபதி தாமஸ் முன்வைத்த அதே கோரிக்கையை ராகுல் காந்தியிடம் நான் முன்வைக்கிறேன். இதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும்.
 

உண்மையில் ராஜிவ்காந்தி கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சி.பி.ஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில்   தெரிவித்துள்ளார். அதேபோல், இவ்வழக்கின் புலனாய்வில்  சிபிஐ ஏராளமான குளறுபடிகளை செய்து இருந்ததாகவும், அதுகுறித்தெல்லாம் தீர்ப்பில் விரிவாக எழுதி அதனடிப்படையில்  தீர்ப்பளிக்க வேண்டும் என்று தாம் நினைத்திருந்த நேரத்தில், சி.பி.ஐ-யை விமர்சிக்கக் கூடாது என்று மற்ற இரு நீதிபதிகளும் கூறியதால் தான் தாம் அப்படி ஒரு தீர்ப்பை எழுதியதாகவும் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்திருக்கிறார்.  7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேறு என்ன ஆதாரம் தேவை? எனத் தெரியவில்லை.
 

சட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்