Skip to main content

குண்டு வெடிப்பு சம்பவம்; கேரள டிஜிபி விளக்கம்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

worship meeting incident Kerala Description of Kerala DGP

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எறிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 36 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமசேரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் குண்டு வெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் கூறுகையில், "வழிபாட்டு அரங்கில் நடந்தது குண்டுவெடிப்பு தான். இன்று காலை 9:40 மணியளவில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு நடந்து கொண்டிருந்தது. தற்போது மூத்த காவல் அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்தில் உள்ளனர். கூடுதல் டி.ஜி.பி.யும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். நானும் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளேன். முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்.

 

worship meeting incident Kerala Description of Kerala DGP

 

இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த சம்பவத்திற்கு டிபன் பாக்ஸ் வகை குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும். குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். சம்பவம் குறித்து பொய்யான கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எதிர்பாராத கொடூர தாக்குதல்; நிலைகுலைந்த பெண் காவலர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Unexpected brutal attack; Deranged female cop

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன். தம்பதியர் இருவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பெண் காவலர் டில்லி ராணி இன்று வழக்கம் போல் தனது பணியினை முடித்து விட்டு காவல்நிலையத்திலிருந்து பிற்பகல் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெரு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சீருடையில் இருந்த டில்லி ராணியை சரமாரியாக வெட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக நடந்த இந்தக் கொடூர தாக்குதலில் பெண் காவலர் டில்லி ராணியின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெண் காவலர் டில்லி ராணியை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் டில்லி ராணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Unexpected brutal attack; Deranged female cop

முதற்கட்ட விசாரணையில் தனது கணவர் மேகநாதன்தான் இச்செயலை செய்ததாக பெண் காவலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால் அவரது கணவரை முதலில் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு அவரை வலை வீசித் தேடி வருகின்றனர். ஏற்கெனவே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் பெண் காவலர் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பெண் காவலர் மனுவும் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில்தான், குடும்ப தகராறில் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் தனது மனைவியான டில்லி ராணியை, அவரது கணவர் மேகநாதன்தான் வெட்டி இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சீருடையில் இருந்த பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதிகாலை ஆட்டோ ரேஸ்; பறிபோன 2 உயிர்கள்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 early morning auto race; 2 lives lost

சென்னை வண்டலூர் பகுதியில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே சென்னையின் பல பகுதிகளில் ஆட்டோ ரேஸ்கள் இரவு நேரங்களில் நடைபெற்று அதனால் விபத்துக்கள் ஏற்பட்டது தொடர்பான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர்ச் செல்லும் வெளிவட்ட சாலையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் சர்.. சர்.. என ஆட்டோக்கள் பறந்தது. இந்தச் சம்பவம் மற்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. அதிகாலை நேரத்தில் வாரத்திற்கு ஒரு முறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆட்டோ ரேஸ்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற ரேஸில் மொத்தமாக எட்டு ஆட்டோக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ரேஸில் இறங்கியுள்ள ஆட்டோக்களை கண்காணிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் 30க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர்.

இப்படி ஆட்டோக்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் செங்குன்றம் அருகே சென்ற பொழுது ஆட்டோக்கள் மீது இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் வாகனங்கள் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் குன்றத்தூரைச் சேர்ந்த மணி மற்றும் அம்பத்தூர் ஜான் சுந்தர் ஆகியோர் தலையில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மாரிமுத்து, மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் இது இருசக்கர விபத்து என எண்ணி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது ரேஸ் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, இந்த விபத்து ஆட்டோ ரேசால் நிகழ்ந்தது உறுதி செய்யபடுத்தப்பட்டு தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.