Skip to main content

தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற விராட் கோலியின் ஜெராக்ஸ்!

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

அரசியல்வாதிகள் தேர்தலின்போது தாங்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்துவிடும் சூழலில், இங்கு ஒருவர் தேர்தலுக்கு முன்பாகவே தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதை நிரூபித்திருக்கிறார். அப்படியே கையும் களவுமாக சிக்கியும் கொண்டார்.

 

Virat

 

மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்பூர் மாவட்டத்தில் உள்ளது ராமலிங்கா கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்துக்கான தேர்தல் கடந்த மே 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட கன்பத் கவாட்டே என்பவர், அதே பகுதியில் கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட மக்களைக் கவர்வதற்காக ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தார். அதாவது, தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அழைத்துவருவதாக உறுதியளித்திருந்தார். மேலும், விராட் கோலி வரவிருப்பதாக ஊர்முழுக்க பேனர்களையும் அடித்து எழுப்பினார்.

 

Virat

 

பிரச்சாரம் நடந்த தினத்தன்று விராட் கோலியின் வருகைக்காக ராமலிங்கா மட்டுமின்றி, அக்கம்பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மக்களும் திரளாக காத்திருந்தனர். ஆனால், அங்கு வந்ததோ விராட் கோலியைப் போலவே தோற்றமுடைய இன்னொரு நபர். தூரத்திலிருந்து அவரைப் பார்த்த பலர் அவருடன் செல்ஃபி எடுக்க, கைக்குலுக்க அருகில் சென்று ஏமாந்து திரும்பியதுதான் மிச்சம். இது நடந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், இன்னமும் அந்த வேட்பாளரைக் கலாய்த்து விராட் கோலியின் ஜெராக்ஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
 

சார்ந்த செய்திகள்