மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறிய குழந்தை மயானத்தில் தகனம் செய்யும் முன்பு கதறி அழுதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் வசிக்கும் ரத்தன் தாஸ்(29), செவ்வாய்க்கிழமை மாலை தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவியை சில்சாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரசவம் பார்ப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும், தாயையோ அல்லது குழந்தையையோ மட்டும் காப்பாற்ற முடியும் என்று அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரத்தன் தாஸ் தனது மனைவியைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்பு இறந்த குழந்தையின் உடலை ரத்தன் தாஸிடம் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இதையடுத்து குழந்தையை தகனம் செய்வதற்காக சில்சாரில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு முன்பு பாக்கெட்டை திறந்த போது குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பிறந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று கூட சரியாகப் பரிசோதிக்காமல் மருத்துவமனை ஊழியர்கள் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர் என்று புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள், “நாங்கள் பல முறை குழந்தையைப் பரிசோதித்தோம்; அப்படியும் குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தேவையான அனைத்து செயல்முறைகளையும் பின்பற்றிய பிறகே குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தோம். எங்கள் மீது எந்த தவறுமில்லை” என்றனர்.