Skip to main content

எதிர்க்கட்சி கூட்டணி: சோனியா காந்திக்கு உத்தவ் தாக்கரேவின் கோரிக்கை!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

uddhav thackeray - sonia

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், விரைவில் வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் என இந்திய அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. அதேசமயம் சிவசேனா மற்றும் காங்கிரஸ் இடையேயான நெருக்கமும் அதிகரித்துவருகிறது.

 

விரைவில் சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (14.12.2021) சிவசேனா உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

 

அக்கூட்டத்தில், பாஜகவை எதிர்கொள்ள மாநில வாரியாக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழலில் நேற்று மஹாராஷ்ட்ரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சோனியா காந்தியும் உத்தவ் தாக்கரேவும் நீண்ட நேரம் உரையாடியதாகவும், அந்த உரையாடலின்போது அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளன.

 

அண்மையில் ராகுல் காந்தியை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை முன்னின்று செய்ய வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்