Skip to main content

“நாட்டில் ஜனநாயகம் செயல்படுவதை அவர்கள் விரும்பவில்லை” - மல்லிகார்ஜூன கார்கே

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

“They don't want democracy to work in the country” - Mallikarjuna Kharge

 

மணிப்பூர் கலவரத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணி எம்.பி.க்கள் அந்த மாநிலத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினர். அதேபோல், எம்.பி.க்கள் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தனர்.

 

இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். மணிப்பூர் சென்று திரும்பியுள்ள 21 எம்,பி.க்களும் இந்தச் சந்திப்பின் போது உடன் இருந்தனர். குடியரசுத் தலைவர் உடனான இந்தச் சந்திப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., கனிமொழி எம்.பி., தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். மணிப்பூருக்கு சென்ற 21 எம்.பி.க்கள் மணிப்பூரின் நிலைமையைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். மணிப்பூர் கலவரம் குறித்தும், அங்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான தெளிவான அறிக்கையையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினோம். மறுவாழ்வு மற்றும் இதர நிலைமைகள் குறித்தும் நாங்கள் விளக்கினோம். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மணிப்பூருக்குச் சென்று மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம்.

 

நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது இரண்டு நிமிடங்கள் எனது மைக் அணைக்கப்பட்டது. இதில் இருந்து நாட்டில் ஜனநாயகம் செயல்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. மணிப்பூர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. மேலும் அது குறித்து அவர்கள் கேட்கக் கூடத் தயாராக இல்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அங்கு உள்ள மெய்த்திஸ் மற்றும் குக்கி இன மக்களை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர வேண்டும். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்