Skip to main content

தெலங்கானா பாஜக தலைவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

telangana bjp

 

தெலங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக்கும் பாஜகவுக்கும் அரசியல் ரீதியான மோதல் அதிகரித்துவருகிறது. அண்மையில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநிலத்தின் முதல்வருமான சந்திரசேகர் ராவ், பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம் என எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இந்தச்சூழலில் தெலங்கானா அரசின் புதிய அரசாணையை எதிர்த்து, அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், தனது அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பாஜக தொண்டர்கள் அலுவலகத்தில் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டத்தை கூட்டியதற்காக தெலங்கானா போலீஸார் பண்டி சஞ்சய் குமாரை கைது செய்ய முயன்றனர். அதேநேரத்தில் பாஜக தொண்டர்கள் பண்டி சஞ்சய் குமாரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீஸாரைத் தடுத்தனர். இதனையடுத்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 

இதற்கிடையே பண்டி சஞ்சய் குமார் மற்றும் பிற பாஜக தலைவர்கள் அலுவலகத்திற்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டனர். இதனையடுத்து போலீஸார் கதவை திறக்க முயன்றனர். அதை பாஜக தொண்டர்கள் தடுத்தனர். அதேபோல் பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனைத்தொடர்ந்து போலீஸார், பாஜக தொண்டர்கள் மீது தடியடியும் நடத்தினர். இதற்கிடையே வெல்டிங் மெஷின் உதவியோடு போலீஸார் கதவுகளை திறந்து பண்டி சஞ்சய் குமாரை வெளியே இழுத்து வந்து கைது செய்தனர்.

 

தொடர்ந்து தெலுங்கானா போலீஸார், பண்டி சஞ்சய் குமார் மீது கரோனா விதிமுறைகளை மீறியதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 51 (பி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அதனைதொடர்ந்து தெலங்கானாவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், பண்டி சஞ்சய் குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் கரிம்நகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்