கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இன்டர்நெட் சேவை படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. இந்த சூழலில் கடந்த 18ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பிறகு வரும் 24ஆம் தேதி பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டபேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சரியான சமயத்தில் மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.